கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் சாலை மறியல்

ஓட்டேரி: ஓட்டேரியில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பால், குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியதை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.,31) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி, திரு.வி.க., நகர் மண்டலம், 76வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைமலை சீனிவாசன் 5வது தெருவில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மண்டல அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று இரட்டைமலை சீனிவாசன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார் மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து, தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணியில் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertisement