தீபாவளியை முன்னிட்டு மின் பராமரிப்புக்கு தடை

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மின் வினியோக சாதனங்களில் பராமரிப்புப் பணிக்காக மேற்கொள்ளப்படும் மின்தடைக்கு மின் வாரியம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வழித்தடங்கள் வழியாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. ‘டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்’ உள்ளிட்ட சாதனங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் பழுது ஏற்படுவதைத் தடுக்க அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியிருந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வரும் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் 9ம் தேதி வரை மின் வினியோக சாதனங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement