அதிகாரிகளும், மக்களும் கடமையுணர்வுடன் செயல்பட்டால் மாநிலம் முழு வளர்ச்சி அடையும்; அமைச்சர் வெங்கடரமணன்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் கட்டப்பட்ட 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்டமேற்கூரை அமைப்புடன் கூடிய 7 நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு விழா இன்று (அக்.,31) நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு மற்றும் மேலப்பாலையூரில் ரூ.11.56 கோடி செலவில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மேற்ககூரை அமைப்புடன் கூடிய 7 சேமிப்பு தளங்களை திறந்து வைத்த உணவுபொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது:

தற்போது, 7 ஆயிரம் டன் கொள்ளவுடன் கூடிய மேற்கூரையுடன் கூடிய 2 நெல் சேமிப்பு தளங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வேப்பூர் அடுத்த புடையூரில் 9.5 ஆயிரம் டன், காட்டுமன்னார்கோவில் வானமாதேவியில் 6 ஆயிரம் டன், திட்டக்குடி தாழநல்லுாரில் 11 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தேவையான பொருட்களை அந்தந்த மாவட்டத்திலேயே இருப்பு வைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் சமுதாய மக்களும் தங்களது கடமையை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது கிராமம், மாவட்டம், மாநிலம் என நாடே முழு வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, செயற்பொறியாளர் ஸ்ரீதர், தாசில்தார் செம்மனசெல்வி, பி.டி.ஓ.,க்கள் முருகன், உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காண்டீபன் நன்றி கூறினார்.

Advertisement