பஸ் சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பரிதாப பலி

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், தவறி விழுந்த ஜோதிடர், பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த அத்தியூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சர்மா,35. ஜோதிடர். திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சர்மா இன்று (அக்.,31) தனது பைக்கில், திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பெண்ணாடம் அடுத்த சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே செம்பேரியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் விக்ரம் ஓட்டி வந்த பைக் நேருக்குநேர் மோதியதில், சர்மா சாலையின் நடுவே விழுந்தார்.

அப்போது, விழுப்புரத்தில் இருந்து திட்டக்குடி சென்ற டி.என். 46 – டி. 2791 பதிவெண் கொண்ட தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி சர்மா சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்ரம் படுகாயமடைந்தார்.

விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement