தமிழ் பிராமியில் 41 செவ்விலக்கியங்கள் உலக சாதனை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

நாமக்கல்:தமிழ் பிராமியில், 41 செவ்விலக்கியங்களை எழுதி உலக சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

புவி மட்ட சாட்டிலைட் மூலம் காலநிலை ஆய்வு, தமிழ் பிராமியில், 41 செவ்விலக்கியங்களை எழுதி உலக சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஆசிரியர்களின் நுால் வெளியீட்டு விழா, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், ''கலாம் கலம்' மற்றும் 'விக்ரம் புவிசாட்' போன்ற குறைந்த விலையிலான சாட்டிலைட்களை கொண்டு, காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, 78 ஆசிரியர்கள், 360 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், 80 ஆசிரியர்கள், 41 தமிழ் செவ்விலக்கியங்களை, தமிழ் -பிராமியில் எழுதியுள்ளது, ஓர் அரிய செயல். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 'தமிழி பூங்கா' அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பஞ்., தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஹேமலதா உருவாக்கிய, 'தமிழி 2.0' என்ற நுாலையும், நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் உருவாக்கிய, 'தமிழ் பழகு' என்ற நுாலையும் வெளியிடப்பட்டது.
பின், 158 ஆசிரியர்களுக்கு, புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கிய, உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

Advertisement