கத்திரிக்காய் விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, மலையாண்டிப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், கோவக்குளம், தாராபுரத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது.

இதில், கத்திரிக்காய் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கிணற்று பாசன முறையில் கத்திரிக்காய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கத்திரிக்காய் செடிகளில் பூக்கள் உதிர்ந்து, காய் பிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வரத்து சரிந்தது.தற்போது, மழை நின்று வெயில் அதிகரித்துள்ளதால் செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. குறைவான காய்கள் மட்டுமே கிடைப்பதால், ஒரு கிலோ கத்திரிக்காய், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம், ஒரு கிலோ கத்திரிக்காய், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement