ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை… கருமுட்டை சேகரிப்பு கும்பலில் 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு

6

நமது நிருபர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண்களை ஏமாற்றி சட்டவிரோதமாக கருமுட்டைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்த பெரும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர். 4 முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 48 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளம் பெண்களை இந்த கும்பல் குறிவைத்துள்ளது. ஒரு முறை கருமுட்டை தானம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தருவதாகக் கூறி இந்த பெண்கள் ஹைதராபாத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பெண்களை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்து, பிரகாஷ் நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதிகள், வாடகை வீடுகளில் தங்க வைத்துள்ளனர்.

விடுதிகள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத கருமுட்டை சேகரிப்பு மையம் இயங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தகுந்த மருத்துவக் கண்காணிப்போ, அனுமதியோ இன்றி, அந்தப் பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகளும், மருந்துகளும் சட்டவிரோதமாக செலுத்தப்பட்டு கருமுட்டைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பல் சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை ஹைதராபாத்தில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு வணிக ரீதியாக அதிக விலைக்கு விற்பனை செய்து கோடி கணக்கில் லாபம் பார்த்துள்ளனர். இந்த கும்பலின் தலைவனாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சர்மா (44) செயல்பட்டுள்ளான்.

குற்றவாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஆள் கடத்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி மற்றும் உதவிபெறும் இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement