ஈரநிலங்கள் குறித்த கலந்தாய்வு பயிலரங்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான ஈரநில மேலாண்மைக் குழு சார்பில் ஈரநிலங்கள் குறித்த கலந்தாய்வு பயிலரங்கம் நடந்தது.

ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் பங்குதாரர்களின் பங்கு தலைப்பில் நடந்த மாவட்ட அளவிலான பயிலரங்கத்திற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார்.

பயிலரங்கில், ஈர நிலங்கள் பாதுகாப்பு, அவற்றின் மேலாண்மை, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், ஈரநில சூழலியலில் ஏற்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, ஈரநிலங்களில் காணப்படும் அயல்நாட்டு மீன் இனங்கள் மற்றும் அவை ஈரநில சூழலியல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் உள்ளூர் உயிரினங்களின் வாழ்விடங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், ஈரநிலங்களை பாதுகாப்பதில் அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், மாவட்ட பசுமைத் தோழர், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

தொடர்ந்து, பயிலரங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement