அகில இந்திய மகளிர் டி 20 கிரிக்கெட் எலைட் பிரிவில் கேரளா வெற்றி

சென்னை: அகில இந்திய மகளிர் பி.சி.சி.ஐ., டி 20 கிரிக்கெட் போட்டியின் ‘எலைட்’ பிரிவில், தமிழக அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கேரள அணி வீழ்த்தியது.

பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 18வது ஆண்டு, அகில இந்திய மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகள், இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.

‘எலைட்’, ‘பிளேட்’ என, இரு பிரிவாக நடத்தப்படும் இப்போட்டியில், நடப்பாண்டு ‘எலைட்’ பிரிவில் 37 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றுள்ளன.

‘லீக்’ மற்றும் ‘நாக் அவுட்’ முறையில் நடப்பாண்டு 134 போட்டிகள் நடக்கின்றன.

இதன் ‘எலைட்’ பிரிவிற்கான ஒரு லீக் போட்டியில், நேற்று முன்தினம், தமிழக அணியை எதிர்த்து கேரளா அணி களமிறங்கியது.

லக்னோ, அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேரள அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுக்க, முதலில் களமிறங்கிய தமிழக பெண்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய கேரள பெண்கள் அணி, 19.3 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement