இஸ்ரேலில் இறந்த கட்டடத் தொழிலாளியின் உடலை திண்டுக்கல் கொண்டு வர கோரிக்கை

நத்தம்:

‘இஸ்ரேலில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்று இறந்த திண்டுக்கல் மாவட்டம் மூங்கில்பட்டி வாலிபர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நத்தம் அருகே மூங்கில்பட்டி சுப்பையா 52. இவரது மகன் வீரமணி 31. இவரது மனைவி புவனேஸ்வரி 25, மகள் தேஜாஸ்ரீ 4, உள்ளனர். இவர் 2 ஆண்டுகளுக்கு முன் கட்டட வேலைக்காக இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றார். கடந்த அக்.27ல் கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது, ராட்சத கிரேன் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் கிரேனில் அடியில் சிக்கிய வீரமணி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதனிடையே அவரது உடலை சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு கொண்டு வர தமிழக முதல்வர் விஜய், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நிவாரணம் பெற்றுத்தரவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement