டாஸ்மாக் கடை மீது மதுபாட்டில்கள் வீச்சு: கடைகளை மூடிய ஊழியர்கள்

நத்தம்:

கோபால்பட்டி டாஸ்மாக் கடையில் பாட்டில்களைத் திரும்பப் பெற்று ஸ்கேன் செய்யும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுபாட்டில்களை கடையின் மீது வீசி உடைத்த ‘குடி’கார போதை ஆசாமிகளால் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி கடைகளை மூடினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று கோபால்பட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில், புதிதாக அமல்படுத்தப்பட்ட காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று ஸ்கேன் செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட காலதாமதத்தால் ஆத்திரமடைந்த சில மதுப்பிரியர்கள், மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையின் மீது வீசி உடைத்தனர். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து கோபால்பட்டி, உலுப்பகுடி, செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி கடைகளை மூடிவிட்டுச் சென்றனர். புதிய நடைமுறைகளால் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களால் ஏற்படும் பிரச்னைகளையும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், அச்சமின்றி பணியாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement