பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்திய பிரிவு கலைப்பு
சென்னை: ‘தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்திய பிரிவு கலைக்கப்படுகிறது’ என, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், உலகவங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், அரசால் செயல்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆற்று வடிநிலப்பகுதிகளில், பாசன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், இத்திட்டம் வாயிலாக, ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைத்தல், நவீனப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீர் தேவைக்கு ஏற்ப, அதிக மதிப்புமிக்க வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தல், பருவநிலை மாற்றங்களை சமாளிக்கும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் பல்கலை, நீர்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை உள்ளிட்டவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தின.
தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்டமாக, இத்திட்டத்தின் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்திய பிரிவை கலைக்கும்படி, திட்ட இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அதை ஏற்று, பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அந்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது என, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
இப்பிரிவில், செப்., முதல் அக்., 31ம்தேதி வரை பணியாற்றியவர்களுக்கு, மாநில அரசு நிதியில் ஊதியம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை, நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவு வாயிலாக செயல்படுத்தவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு