மின்துறை பொறியாளர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பாராட்டு

புதுச்சேரி: மரப்பாலம் – அரியாங்குப்பம் மின்பாதையில் பழுதடைந்த மின்சாதன பொருட்களை மாற்றி அமைத்த இளநிலை பொறியாளர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.

மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து அரியாங்குப்பத்திற்கு செல்லும் மின்பாதையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட உயர் மின்னழுத்த கேபிள்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உள்ளதால், அடிக்கடி அவற்றில் பழுது ஏற்பட்டு, அரியாங்குப்பம் மேற்குப் பகுதி, நோணாங்குப்பம், சுப்பையா நகர், மணவெளி, சண்முகா நகர், ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டதின் பேரில், மின்தடையை போக்க நடவடிக்கை எடுக்கும்படி அய்யப்பன் எம்.எல்.ஏ., மின்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, முருங்கப்பாக்கம் மின்துறை இளநிலை பொறியாளர் குமரேசன் மற்றும் அரியாங்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் கதிரவன் தலைமையிலான ஊழியர்கள் மரப்பாலம் – அரியாங்குப்பம் மின்பாதையில் உள்ள பழுதடைந்த உயர் மின்னழுத்த கேபிள்கள் மற்றும் மின்சாதன பொருட்களை அகற்றிவிட்டு புதிதாக அமைத்தனர்.

இதையடுத்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்ட இளநிலை பொறியாளர்களுக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து பாராட்டினார்.

Advertisement