விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் குட்கா பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்று கிடந்த 4 பைகளில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் 3வது நடைமேடை பகுதியில் விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பிளமின்ராஜ் தலைமையிலான பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் கேட்பாரற்று 4 பைகள் கிடந்தது. இதைபார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பயணிகளிடம் விசாரித்தனர்.

அப்போது, அந்த பை குறித்து தெரியாது என பயணிகள் கூறினர். அதன்பின், அந்த பைகளை பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு, பையை விட்டு சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement