உலக பாதுகாப்பிற்காக ஒரு சிறிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்; ஈரான் போர் குறித்த டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது, ஈரான் மீதான போர் குறித்து அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது; உலகின் மிக முக்கிய பயங்கரவாத ஆதரவு நாட்டிடம் (ஈரான்) நமது நாட்டை நான் பாதுகாத்துள்ளேன். 1979 முதல் அவர்கள் நம்மை தாக்கி வருகிறார்கள். எனது முதல் ஆட்சி காலத்தில் அவர்களின் பாதுகாப்பு படை ஜெனரல் சுலைமணியை கொன்றோம். இதை அனைத்தையும் அவர்கள் தான் துவக்கி வைத்தார்கள். நாம் முடித்து வைக்கிறோம்.

ஈரானிடம் கடற்படை இல்லை. அவர்களின் விமானங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளோம். ரேடார் வசதியோ, வான்வழி தாக்குதல் எதிர்ப்பு ஆயுதங்களோ இல்லை. இப்போது தலைவர்களும் இல்லை. அது தான் எனக்கு பிரச்னையாக உள்ளது. பேச்சு நடத்த யாருமே அங்கு இல்லை. ஈரானுக்கு அதிபராக ஒருவரும் முன்வரவில்லை.

கடந்த மூன்று மாதங்களில் பணவீக்கம் 1.7% ஆகக் குறைந்துள்ளது. தூங்கி வழியும் ஜோ பைடன், அதிக விலைவாசியை மட்டுமே விட்டுச் சென்றார். ஈரான் அணுஆயுதம் வைத்திருப்பதை தடுத்துள்ளேன். கச்சா எண்ணெய் விலை, முன்னாள் அதிபர்கள் பைடன், ஒபாமா ஆட்சிக் காலத்தை விட மிகக் குறைவாக உள்ளது.

இந்தப் போர் முடிந்ததும், எண்ணெய் விலை மேலும் சரசரவெனக் குறையும். ஈரான் அணுஆயுதம் வைத்திருக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நமது நாட்டின், உலகின் பாதுகாப்பிற்காக. நாம் ஒரு சிறிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது, இவ்வாறு கூறினார்.

Advertisement