தீபாவளி மாமூல் வாங்குவதில் மோதல் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: இரு போலீசார் அதிரடி இடமாற்றம்
புதுச்சேரி: தீபாவளி பரிசு வாங்குவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், இரண்டு காவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை ஒன்றுக்கு, வழக்கம்போல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கவனிப்பு கேட்பதற்காக பெரியக்கடை போலீசும், போக்குவரத்து போலீசில் சிலர் சென்றுள்ளனர்.
அப்போது, யாருக்கு எவ்வளவு பங்கு? யார் யார் பட்டியலில் இடம் பெறுவது? என்பதில் இருவருக்கும் இடையே கடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி துணிக்கடையிலேயே இருவருக்கும் இடையே கைகலப்பாகவும் தள்ளுமுள்ளாகவும் மாறியது. கடைக்குள் புகுந்து சீருடையில் இருந்த காவலர்கள் நடத்திய இந்த அடிதடி கூத்தைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ச்சியடைந்த துணிக்கடை உரிமையாளரும், உடனடியாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் எஸ்.பி. மற்றும் எஸ்.பி. ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் செய்தார்.
இதன் பேரில் பெரியகடை சிறப்பு நிலை ஏட்டு சசிக்குமார் காரைக்கால் ஆயுதப்படைக்கும், கிழக்கு போக்குவரத்து காவலர் வெங்கடேசன் காரைக்கால் கடலோரக் காவல் படைக்கு இடமாற்றம் செய்து, காவல்துறை தலைமையக எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் அதிரடியாக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மாமூல் சண்டையால் இரு காவலர்களும் தூக்கியடிக்கப்பட்ட சம்பவம், பண்டிகைக் காலத்தில் ‘பரிசு’ வேட்டை கனவில் இருக்கும் போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு