போதைப்பொருளை வைத்து சிவசேனா நிர்வாகியை சிக்க வைத்த போலீஸ்: ரகசிய கேமராவில் பதிவானதால் சர்ச்சை

சண்டிகர்: பஞ்சாபில், சிவசேனா நிர்வாகி ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வீட்டில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவரே போதைப்பொருளை வைக்கும் காட்சி தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள லுாதியானா மாவட்டம், கன்னா நகரத்தைச் சேர்ந்தவர் சிவசேனா நிர்வாகி மகந்த் காஷ்மீர் கிரி. இவர் ஹெராயின் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கூறி, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிரி வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காட்சியில், சப் -- இன்ஸ்பெக்டர் சுக்தேவ் சிங், சாதாரண உடையில் மகந்த் வீட்டுக்குள் நுழைந்து, ஓர் அறையில் உள்ள மெத்தைக்கு அடியில் ஏதோ ஒரு பொருளை வைப்பது பதிவாகியுள்ளது. சிறிது நேரத்துக்குப் பின் அங்கு வந்த போலீஸ் குழுவினர், அதே இடத்தில் சோதனை நடத்தி ஹெராயினை கைப்பற்றினர்.

ரகசிய கேமரா காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, கன்னா மாவட்ட எஸ்.பி., டாக்டர் தர்பன் அலுவாலியா, சப் - -இன்ஸ்பெக்டர் சுக்தேவ் சிங்கை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்தார். 'மக்களை வழக்கில் சிக்க வைக்க போலீசாரே வீடுகளில் போதைப்பொருளை மறைத்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பகவந்த் மான் இதற்கு பதிலளிக்க வேண்டும்' என, கூறினார்.

Advertisement