குப்பை கிடங்கால் துர்நாற்றம் கிராம சபையில் எதிர்ப்பு

வடவள்ளி: உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, சோமையம்பாளையம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், சோமையம்பாளையம் விநாயகர் கோயில் அருகே நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், சோமையம்பாளையம், 3வது வார்டு, காஸ்மோ ரத்னா குடியிருப்பு பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கொட்டப்படும் குப்பையால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, உடல்நலனும் பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தை அகற்ற வேண்டும் என, பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள், கருப்பு உடை அணிந்து, மூக்கில் கருப்பு துணி அணிந்து, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஊராட்சிக்கு அனைத்து வரிகளை கட்டியும், ஊராட்சி நிர்வாகம் எந்த வசதியையும் செய்து தருவதில்லை என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் அலீம்ஷா பார்வையாளராக கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

Advertisement