சிந்திக்க வைக்கும் பாடத்திட்டங்கள்: பல்கலைகளுக்கு உயர்கல்வி மன்றம் 'அட்வைஸ்'

மதுரை: திறன் சார்ந்த பயிற்சிகளுடன் மாணவர்களை சிந்திக்க வைக்கும் பாடத் திட்டங்களை பல்கலைகள் உருவாக்க வேண்டும், என தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

மதுரை காமராஜ் பல்கலையில் துறைத் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பதிவாளர் முத்தையா (பொறுப்பு) வரவேற்றார். டீன் கண்ணதாசன், பேராசிரியர்கள் சங்கர் நடேசன், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விஜயகுமார் பேசியதாவது: தற்போது உயர்கல்வியில் பட்டப் படிப்பை முடிக்கும்போதே மாணவருக்கு என்னென்ன திறன்கள், அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்ப பாடத் திட்டத்தை வடிவமைப்பது முக்கியம். வேலைவாய்ப்பு, எதிர்கால திறன்களை வளர்க்கும் வகையில் கற்றல் முடிவுகளுக்கு ஏற்ற பாடத்திட்டக் கட்டமைப்புகளை (எல்.ஓ.சி.எப்.,) பல்கலைகளில் பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

பிரச்னைகளுக்கு தீர்வுகாணுதல், பகுப்பாய்வு செய்தல், சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு வினாக்கள் தயார் செய்ய வேண்டும். படிக்கும் போதே கூடுதல் திறமைகளை வளர்க்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் அமைத்துத்தர வேண்டும். கல்லுாரி, பல்கலைகளில் தகுதி, நுட்பம் வாய்ந்த வினாத்தாள் தயாரித்தலில் பேராசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.

உயர்கல்வி மன்றம் தேர்வு செய்துள்ள துறைவாரியான ஸ்கில் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement