ஆந்திராவுக்கு உதவ 500 பணியாளர் அனுப்பியது தமிழக மின்வாரியம்

சென்னை: ‘‘முதல்வர் விஜய் உத்தரவில், ஆந்திராவில் மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, 500 மின்வாரிய பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்,’’ என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

ஆந்திராவில் வீசிய, ‘முரசு’ புயலால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் மின் வினியோக கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சரிசெய்ய உதவுமாறு, தமிழக முதல்வர் விஜயிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, முதல்வர் விஜய் உத்தரவின்படி, தமிழக மின்வாரியத்தில் இருந்து, 500 பணியாளர்களை ஆந்திராவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், நிர்மல்குமார் அளித்த பேட்டி:

ஆந்திராவில் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க, தமிழக

மின்வாரியத்தின் சார்பில், ஒரு குழுவில், 20 பேர் என, மொத்தம், 25 குழுக்கள் வாயிலாக, 500 பணியாளர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன், வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement