எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்

ராசிபுரம்: எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்யக்கோரி, ராசிபுரத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும், எஸ்.ஐ.,க்களின் செயல்பாடுகள் குறித்து வக்கீல்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக, ராசிபுரம் எஸ்.ஐ., மனோகரன், நாமகிரிப்பேட்டை எஸ்.ஐ., சிவா ஆகிய இருவரும், வழக்கு தொடர்பாக, நீதிமன்ற வழக்காடிகளை அழைத்துச்செல்லும்போது, வக்கீல்களை ஒருமையில் பேசுவதும், வழக்காடிகளை தாக்கி அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், வக்கீல்களை அவமதித்து, வழக்காடிகளை தாக்கிய, எஸ்.ஐ.,க்களை, உடனடியாக வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், நேற்று குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் நடராஜன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, நடராஜன் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்து போலீஸ் ஸ்டேஷன்களை முற்றகையிடும் போராட்டம் நடத்தப்படும். மேலும், இந்த நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம், மாவட்டம், மாநிலம் என தொடரும்,’’ என்றார்.

Advertisement