மீனம்பாக்கம் விரிவாக்க திட்டத்தை துரிதப்படுத்த தமிழகம் கோரிக்கை: புதிய விமான நிலைய பணியில் சிக்கல்

சென்னை: சென்னை புதிய விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள செய்யூர், மாநெல்லுார் ஆகிய இடங்களில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தியும், இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், மீனம்பாக்கத்தில் ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளை துரிதப்படுத்துமாறு, அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைக்க, கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. தனியார் வசம் உள்ள, 3,000 ஏக்கர் நிலம் எடுக்கும் பணி தொடங்கிய நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தினர்.

அவர்களுக்கு, த.வெ.க., ஆதரவு அளித்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். புதிய விமான நிலையம் அமைக்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், திருவள்ளூர் மாவட்டத்தில் மாநெல்லுார் ஆகிய இடங்களை, ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தேர்வு செய்தது.

இரு இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு செய்து, வாய்ப்புள்ள இடத்தை பரிந்துரை செய்யுமாறு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம், செப்., தொடக்கத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது.

இன்னும், ஆணையம் தரப்பில் இருந்து எந்த பதிலும் அரசுக்கு கிடைக்கவில்லை. அத்திட்ட பணிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த, அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் முறைப்படி தெரிவித்து விட்டால், இரு வாரங்களுக்குள் வந்து ஆய்வு செய்வது வழக்கம்; அதற்கு மேல் தாமதமாகாது. பரந்துார் திட்டம் ரத்து அறிவிப்பில் இருந்து, ஒன்றரை மாதங்களுக்குள் புதிய இடத்தை தேர்வு செய்து, பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இரு மாதங்களுக்கு மேல் ஆகியும் செய்யூர், மாநெல்லுாரில் ஆய்வு செய்ய ஆணையம் முன்வரவில்லை. பரந்துார் திட்டம் ரத்து செய்யப்பட்டதால், ஆணையத்திற்கு ஏற்பட்ட அதிருப்தி தான் இதற்கு காரணம். அதனால், மீனம்பாக்கத்தில், ஒருங்கிணைந்த மூன்றாவது முனைய பணிகளை வேகப்படுத்துவதுடன், ஐந்தாவது முனையம் அமைக்கும் பணிகளையும் தொடங்குமாறு, ஆணையத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement