த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்

1

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாவளியை முன்னிட்டு குடும்பத் திருவிழா நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கவலைக்குள்ளாகியுள்ளது. செஞ்சியில் மாணவி மாயமாகி 25 நாட்களுக்கு மேல் ஆகியும் முன்னேற்றம் இல்லை. தமிழகம் முழுதும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ளார். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. இதில் அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு முழுதும் மின்தடை உள்ளது. தீபாவளி பண்டிகைக்குள் அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்ய வேண்டும்.

சீனாவில் இருந்து வரும் பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்க வேண்டும். ஜ.எஸ்.ஐ., சான்றிதழ் இருக்கும்போது புதிதாக ஹலால் மார்க் என்ற பெயரில் பிரியாணி, துணி வியாபாரம் வரை முஸ்லிம் லீக் மற்றும் மத அடிப்படைவாதிகள் துணையுடன் வர்த்தகம் நடக்கிறது.

தமிழர் பொருளாதாரம் மில்லியன் டாலர் கணக்கில் சுரண்டப்படுகிறது, இந்த நிதி எங்கு போகிறது என்று தெரியவில்லை, எனவே ஹலால் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.

அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே முதல்வர் விஜய் அரசாங்கத்தை கவிழ்க்க விடுதலைச் சிறுத்தைகள் சதி செய்கின்றனர். பா.ம.க., எப்போதும் அங்கு போக தயாராக உள்ளது.

சனாதனத்தை அழிப்போம் என்று அமைச்சர் வன்னி அரசு பேசுவதை கண்டிக்கிறோம். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, வி.சி., கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

Advertisement