450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்

5

தமிழக ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் விற்பதற்காக, மஹாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரப்பட்ட, 450 டன் வெங்காயம் எங்கே சென்றது என தெரியவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பதில், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வெளிச்சந்தையில், பெரிய வெங்காயம், கிலோ, 70 ரூபாய் - 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலையை கட்டுப்படுத்த, தமிழக கூட்டுறவுத் துறை சார்பில், 'நாபெட்' எனப்படும், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வாயிலாக, வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு கடைகளில் விற்கப்படுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4ம் கட்டமாக, 'நாபெட்' அமைப்பு அனுப்பிய, 450 டன் வெங்காயம் தரமற்றதாக இருந்ததால், தமிழக அரசு அதை பெறவில்லை. அந்த வெங்காயம், சென்னை, தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்தில் வீணாகி வருகிறது என, தகவல் வெளியானது,

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

4ம் கட்டமாக ரேஷன் கடைகளில் விற்க, 'நாபெட்' அமைப்பிடம், பெரிய வெங்காயம் கேட்கப்பட்டது. தமிழக அதிகாரிகள் குழு, வெங்காயத்தின் தரத்தை நேரில் ஆய்வு செய்யும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த வாரம், தமிழக கூட்டுறவு இணை பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் முகாமிட்டிருந்த நிலையில், அவர்களிடம் காட்டாமல், 450 டன் பெரிய வெங்காயத்தை, தேசிய வேளாண் கூட்டுறவு அமைப்பினர், சரக்கு ரயிலில், சென்னைக்கு அனுப்பி விட்டனர்.

கிலோ விலை, 29 ரூபாய். ரயிலில் கடந்த சனிக்கிழமை சென்னை வந்த வெங்காயத்தின் தரத்தை பரிசோதித்தபோது, 25 சதவீதத்திற்கு மேல், பயன்படுத்த முடியாமல் தரமற்று இருந்தது. இந்த வெங்காயத்திற்கு பணம் தரவில்லை. தரமற்ற வெங்காயம் வேண்டாம் எனக் கூறி, அதற்கான 'ஆர்டரை' ரத்து செய்து விட்டோம். அந்த வெங்காயத்தை திரும்ப எடுத்து கொள்வது, தேசிய கூட்டுறவு அமைப்பின் பணி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகளை கேட்டபோது, 'மஹாராஷ்டிராவில் இருந்து வந்த வெங்காயம், திருப்பி அனுப்பப்படவில்லை. அதை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்து சென்று விட்டனர். திரும்ப அனுப்புவதாக இருந்தால், ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி எதுவும் கோரப்படவில்லை. ரயில் முனையத்தில், வெங்காயம் எதுவும் இல்லை' என தெரிவித்தனர்.

தமிழக கூட்டுறவுத் துறை அதிகாரிகளோ, 'நாங்கள் வெங்காயத்தை பெறவில்லை' என்கின்றனர். இதனால், 450 டன் வெங்காயம் எங்கே சென்றது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement