சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்படும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ, மாவட்ட அளவில் கண்காகணிப்பு குழு அமைக்க, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

வெள்ளம் மற்றும் கன மழையால் பாதிக்கப்படக் கூடிய, ‘சிட்கோ’ தொழிற்பேட்டைகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு நடவடிக்கைகளில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

‘சிட்கோ’ நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையங்கள் ஒருங்கிணைந்து, பாதிப்புக்குள்ளாகக் கூடிய தொழிற்சாலைகளை, அடையாளம் காணுதல், நீர் வெளியேற்ற பாதைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக கிளை மேலாளர், சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க மாவட்ட பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கி, மாவட்ட அளவிலான கண்காகணிப்பு குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement