விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’

சேலம்: அரசு விழாவுக்கு மேயரை அழைக்காததால், தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேலம் மாநகராட்சி, 43வது வார்டு கிச்சிப்பாளையம் புதுத்தெரு, உயர்நிலைப்பள்ளியில், 1.12 கோடி ரூபாயில், 8 கூடுதல் வகுப்பறை கட்டடம், 25வது வார்டு, பள்ளப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம், கோர்ட் ரோடு, 3வது தெருவில், 19 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோவில் தெருவில், 19 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம்.

மற்றும் புத்துமாரியம்மன் கோவில் கிழக்கு பகுதியில், 19 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், சின்னம்மாபேட்டை அங்கன்வாடி மையம், கோதாவரி தெரு சுப்ரமணியன் நகரில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நகர்புற ஆரம்பசுகாதார நிலைய கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.

மொத்தம், 4.10 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திறந்து வைத்தார்.

முன்னதாக, கிச்சிப்பாளையம் விழாவில் கலந்து கொண்ட தி.மு.க., கவுன்சிலர் குணசேகரன், ‘மேயரை விழாவுக்கு அழைத்தீர்களா’ என, மாநகராட்சி கமிஷனரிடம் கேள்வி எழுப்பி, ‘அப்படியெனில், உங்களுடைய மொபைல்போனை காட்டுங்கள்’ என கூறி, வாக்குவாதம் செய்தார். அதனால், பரபரப்பு உண்டானது.

கமிஷனர் சரிவர பதிலளிக்காத நிலையில், அங்கிருந்து கவுன்சிலர் குணசேகரன் வெளியேறினார். அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் அழைத்தார்.

அவரிடம், ‘கமிஷனரின் நடவடிக்கை சரியில்லை. முறையாக எதையும் செய்வது கிடையாது. மேயரை முறைப்படி அழைக்கவில்லை. எதை பற்றியும் அவருக்கு கவலையில்லை’ என கூறி, அங்கிருந்து சென்றுவிட்டார். விழாவுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவக்குமார், துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், ‘‘என் வார்டில் நடந்த பள்ளி விழாவுக்கு முறையான அழைப்பு இல்லை. மேயருக்கும் அழைப்பு விடுவிக்கவில்லை. அதிகாரிகளை கேட்டால், ஏதேதோ காரணம் கூறுகின்றனர்,’’ என்றார்.

Advertisement