விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்

திருப்புத்துார்:மதுரை பஸ் ஸ்டாண்டில் முன்னதாக பஸ்சில் ஏற அனுமதி மறுத்த தனியார் பஸ் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கம் போல் கண் துடைப்பாக பேசி முடிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட பயணிக்கு இழப்பீடோ, பணியாளர் மீது விசாரணையோ நடத்தப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

அண்மையில் மதுரை பஸ் ஸ்டாண்டில் திருப்புத்துார் வழியாக செல்லும் தனியார் பஸ்களில் திருப்புத்துார் பயணிகள் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்து புறப்பட இருந்த அரசு பஸ்சிலும் பயணிகள் முன்னதாக ஏறக்கூடாது என்று தடுக்கப்பட்டனர். திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டிற்கு சம்பந்தப்பட்ட பஸ் வந்த போது பயணிகளால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் போலீசாரால் விடுவிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசிலும் பயணிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் ஆர்.டி.ஓ., கருப்பண்ணன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் அரசு பஸ் நேர ஆய்வாளர், தனியார் பஸ் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஆனால் பயணியரை

அவமதித்த பஸ் பணியாளர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

பஸ் ஸ்டாண்ட்களில் அவமதிக்கப்பட்ட பயணிகள் தரப்பில் கூறுகையில், பல முறை நடந்த கூட்டங்களில் முதலில் வரும் பயணிகளை பஸ்சில் ஏற அனுமதி மறுக்கும் பஸ் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் இப்படி நடவடிக்கை எடுக்காததால் இந்த பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த முறையும் கண்துடைப்பாக கூட்டம் நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்' என்றனர்.

ஆர்.டி.ஓ., கூறுகையில், இனி தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கலாம்' என சமாளித்தார்.பஸ் ஸ்டாண்டில் முதலில் நிற்கும் பஸ்சில் ஏறாமல் பின்னால்

நிற்கும் பஸ்சில் பயணிகள் ஏறுவதால் அவர்களை பஸ் ஊழியர்கள் தடுப்பது குறித்து பேசப்பட்டது.

தனியார் பஸ் நிர்வாகத்தினர் கூறுகையில், இந்தப் பிரச்னையை அரசு பஸ் பணியாளர்களே முதலில் துவக்கினர். நாங்கள் பயணிகளின் பைகளை வாங்கி சீட்டில் வைப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்களும் அதை தொடர்கிறோம்' என்றனர்.ஆர்.டி.ஓ., கூறுகையில், பயணிகள் விருப்பத்திற்கேற்ப எந்த பஸ்சிலும் ஏறி அமரலாம். அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அரசு போக்குவரத்து மண்டல அலுவலக நிர்வாகிகளிடம் இது தெரிவிக்கப்படும்' என்றார்.

பின்னர் வழக்கம் போல் மதுரை, காரைக்குடி பஸ் ஸ்டாண்ட்களில் திருப்புத்துார் பயணிகள் ஏறி அமர அனுமதி மறுக்கும் பஸ்களின் வழித்தடங்களை தற்காலிகமாக ரத்து செய்யவும், பஸ்களின் உரிமம் ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement