ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்

ராசிபுரம்: கூட்டுறவுத்துறை சார்பில், பத்து வகையான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை, ராசிபுரத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழக அரசின் வரி வருவாயில், 75 சதவீத வருவாயை ஈட்டித்தரும் முக்கிய துறைகளாக பத்திரப்பதிவு துறையும், வணிகவரி துறையும் உள்ளன. விரைவில் மாதிரி பதிவு என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இத்திட்டம், தமிழகத்தில், ஐந்து இடங்களில் மட்டும் அமையவுள்ளது. எப்போதும்போல மற்ற, 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கும். அமர்ந்த இடத்திலேயே கூடுதல் வசதிகளுடன் பணிகளை முடிக்க விரும்புவோர் மட்டும் கூடுதல் கட்டணம் செலுத்தி இந்த சிறப்பு சேவையை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் அரசுக்கே சென்றடையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

Advertisement