கல்லறை திருநாளில் கூட்டு பிரார்த்தனை
அரூர்; கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் துாய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில், முன்னோர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை ராஜா சேசுராஜ் தலைமையில், சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கொப்பக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், பென்னாகரத்திலும் நடந்தது.
* கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள கல்லறையில், துாய பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையில், சிறப்பு ஜெப வழிப்பாடு நடந்தது. தொடர்ந்து, கூட்டு பிரார்த்தனை, ஜெபவழிபாடு நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், கந்திகுப்பம், எலத்தகிரி, ராயக்கோட்டை, மதகொண்டப்பள்ளி, ஓசூர் என, மாவட்டம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் பிரார்த்தனை நடந்தது.