களை கட்டிய திருப்புவனம் சந்தை

திருப்புவனம்: தீபாவளி திருநாள் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்புவனத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழி விலை உயர்ந்தது.

திருப்புவனத்தை சுற்றியுள்ள மணல்மேடு, கீழடி, அல்லிநகரம், பழையனுார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆடு கோழி வாத்து வான்கோழி கறவை மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை காலை 10:00 மணி வரை நடக்கும் கால்நடைச் சந்தையில் தாங்கள் வளர்க்கும் ஆடு கோழிகளை விற்பனை செய்வது வழக்கம். வாரந்தோறும் சராசரியாக 500 ஆடுகள் வரை விற்பனையாகி வரும் நிலையில் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆடி உள்ளிட்ட விசேஷ தினங்களில் இருமடங்காக உயரும். நேற்று தீபாவளியை முன்னிட்டு நடந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வார சந்தைக்கு ஏழாயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. நேற்று பன்னிரண்டாயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது அதே போல ஒன்றரை கிலோ எடை கொண்ட கோழி 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய், வான் கோழி குஞ்சுகள் ஜோடி 900 ரூபாயாகவும், 4 கிலோ எடை கொண்ட வாத்துக்கள் 1200 ருபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டன. 30 கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடாய் 36 ஆயிரம் ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு வார சந்தைக்கு நேற்று டெண்டர் விடப்பட்டு தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் ஆடுகள், கோழிகள், காய்கறி கடைகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Advertisement