குட்கா வழக்கில் 'ஹார்ட் டிஸ்க்'கை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியில், மத்திய - மாநில அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்று, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதித்ததாக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உட்பட 27 பேர் மீது, 2018ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு, குற்றப்பத்திரிகையுடன் கூடிய 'ஹார்ட் டிஸ்க்' கடந்த ஜூன் 4ம் தேதி சிபிஐயால் வழங்கப்பட்டது. ஆனால், அதில் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, பல்வேறு ஆவணங்கள் வழங்கப்படவில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் வழக்கை விரைந்து முடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 'ஹார்ட் டிஸ்க்'குகளை திரும்ப பெற்று, மீண்டும் நகல் எடுத்து வழங்கவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி என். லோகேஷ்வரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உட்பட 16 பேர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது சிபிஐ தரப்பில், 'உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஹார்ட் டிஸ்க்குகளை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, ''இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் ஹார்ட் டிஸ்க்கை சிபிஐ வசம், கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க்கை வழங்காத நபர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படும்,'' என, எச்சரிக்கையும் விடுத்தார்.

அதை ஏற்று, ஹார்ட் டிஸ்க்கை கையோடு கொண்டு வந்த, விஜயபாஸ்கர் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோர், நீதிமன்றத்தில் அவற்றை ஒப்படைத்துவிட்டு சென்றனர். மீதமுள்ளவர்கள் ஹார்ட் டிஸ்க்கை நாளை (நவ.12) ஒப்படைப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement