ரேஷன்கடை பயன்பாட்டிற்கு வராததால் பொருட்கள் வாங்க சிரமம்: வ.உ.சி., நகர் குடியிருப்போர் குமுறல்

போடி: போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகரில் ரேஷன் கடை கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வரததால் பொருட்கள் வாங்க சிரமம் ஏற்படுகிறது. வடக்கு தெருவிற்கு செல்லும் பாதையில் ரோடு வசதி இன்றி குப்பை தேங்கியுள்ளதால் குடியிருப்போர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் இஸ்ரேல் சந்து, சர்ச் தெரு, வ.உ.சி. நகர் நடுத்தெரு, தெற்கு, வடக்கு தெரு, வேதமுத்து சந்து, தியாகி விஸ்வநாதன் தெரு, செபஸ்தியார் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெற்கு சந்து உள்ளிட்ட 15 தெருக்களில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடை, ரோடு, சாக்கடை, தெருவிளக்கு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைகின்றனர். இப் பகுதி குடியிருப்போர் பரமசிவம், பாண்டி, குமார், சவுந்தர்யா, சுருளியம்மாள் ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:

பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை :





எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. ரேஷன் பொருட்கள் பெற அரை கி.மீ., தூரம் நடந்து சென்று பெருமாள் கோயில் நடுப்பட்டி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெறுகிறோம். ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

* ரோடு, தெருவிளக்கு இல்லை:





மெயின் ரோட்டில் இருந்து வ.உ.சி., நகர் செல்லும் முக்கிய பாதையாகும். இங்கு ரோடு இன்றி மண் பாதையாகவும், குப்பை தேங்கியுள்ளது. வாகனங்கள் செல்லும் போது குப்பை காற்றில் பறந்து நடந்து செல்வோர் மீது விழுகிறது. இது பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுத்துகிறது. தெருவிளக்கு இன்றி இருளில் மூழ்கியுள்ளதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. சாலை காளியம்மன் கோயில் மெயின் ரோடு - சர்ச் ரோடு இணைக்கும் பகுதியான வ.உ.சி. நகர் வடக்கு, கிழக்கு, தெற்கு தெருக்கள் மண் பாதையாக உள்ளது. காலி இடங்களில் முட்செடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் வீட்டிற்கு புகுந்து விடுகிறது. இடம் இருந்தும் பூங்கா அமைக்காததால் குப்பைகொட்டி வருகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர்செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

* பாதாள சாக்கடை இணைப்பு இன்றி சிரமம் :





காளியம்மன் கோயில் தெற்கு சந்து, கருப்பணன் சந்து, செபஸ்தியார் கோயில் சந்து பகுதியில் பாதாள சாக்கடை வரி செலுத்தியும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறவில்லை. வ.உ.சி., நகர் தெற்கு தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் இணைப்பு வழங்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லவதில் சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் பைப் லைன் அமைத்தும் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. குடிநீர் விலைக்கு வாங்கி பருகும் நிலை உள்ளது.

* பட்டா வழங்கவில்லை:

சர்ச் தெருவில் இருந்து தியாகி விஸ்வ நாதன் தெரு கிழக்கு பகுதியில் 21 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 32 குடும்பங்களில் 18 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேருக்கு பட்டா வழங்காததால் குடிநீர், மின்வசதி இன்றி சிரமம் அடைகின்றனர். பட்டா கேட்டு விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. பட்டா, ரோடு, சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement