தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அவர் கூறியதாவது: மாறிவரும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் பங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியை 2029ம் ஆண்டிற்குள் ரூ.3 லட்சம் கோடியாக உயர்த்தவும், பாதுகாப்புத் துறை தளவாடங்கள் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த பாதுகாப்பு துறை பட்ஜெட் ரூ.7.85 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதற்கும், புதிய தளவாடங்களை வாங்குவதற்கும் தனியாக ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து, இந்தியாவிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களும் இன்றியமையாதவை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement