வர்த்தகத்திற்கு இந்தியா தடை: பாகிஸ்தானுக்கு ரூ.3.7 லட்சம் கோடி இழப்பு

புதுடில்லி:

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை மத்திய அரசு தடை செய்தது.

இது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியா விதித்த வர்த்தக தடையால், பாகிஸ்தானுக்கு ரூ.3,78,883 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு வகையான மூலப்பொருட்கள் மற்றும் சில பொருட்களை தூரத்தில் உள்ள சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்வதால், போக்குவரத்து செலவு , காலமும் அதிகமாகிறது.

பாகிஸ்தானுக்கான மருந்துத்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தால், ஆண்டுக்கு ரூ.18,930 கோடி முதல் ரூ.28,422 கோடி வரை பாகிஸ்தான் மிச்சப்படுத்தலாம்.

பாகிஸ்தானில் உள்நாட்டு ஜவுளி உற்பத்தி சரிந்து வருவதால் செலவு அதிகரித்தது. பருத்தியை பிரேசில், எகிப்து, சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ரூ.47327 கோடி செலவாகிறது.

சர்க்கரை, உரம், சிமென்ட், பெட்ரோலிய பொருட்கள், இரும்பு, காய்கறி இயந்திரங்கள் ஆகியவற்றை சிறப்பாக உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்தியாவிடம் மட்டும் இல்லாமல், வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் வர்த்தகத்தை துவங்கினால், இரு நாட்டு வணிகர்களுக்கும் பலன் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Advertisement