அனில் அம்பானிக்கு சொந்தமான 2 விமானங்கள், 6 நிலங்கள் உள்ளிட்ட 510 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

1

புதுடில்லி:

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனங்கள் லிமிடெட் வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் வங்கி மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

சிபிஐ, டில்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை துவக்கியது.

இந்த மோசடியில் அனில் அம்பானிக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.அதன் விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டது.

அதன்படி,

மஹாராஷ்டிராவில்

இரண்டு பயணிகள் விமானம்

6 நிலங்கள்

ஒரு அலுவலக கட்டடம் ஆகியவற்றையும்

தமிழகத்தில் இரண்டு காற்றாலைகள் மற்றும் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடட் வங்கி மோசடி வழக்கில் ரூ.263 கோடி மதிப்பு சொத்தும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் வங்கி மோசடி வழக்கில் ரூ.247.12 கோடி மதிப்பு சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கிகளில் வாங்கிய கடனை, குறிப்பிட்ட காரணத்துக்காக பயன்படுத்தாமல், வேறு காரணத்திற்காக பயன்படுத்தி அனில் அம்பானி குழுமம் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

பல்வேறு வழக்குகளில் அனில் அம்பானிக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன. அவ்வகையில் இதுவரை 23,100 கோடி ரூபாய் சொத்து முடக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ,1,816.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement