கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் முதலிடம்

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லுாரி மைதானத்தில் மாவட்ட அளவிலான கமுதி கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இதில் முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் இருந்து 8க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடி புள்ளி பட்டியலில் அதிகம் எடுத்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது.

இதில் கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி முதலிடம், ஆர்.எஸ்.மங்கலம் எப்.சி.சி.ஆர். அணி இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் சண்முகபாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேல் மயில் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் வேலவன் உட்பட பலர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை தலைவர் காளிமுத்து, செயலாளர் பிரகாஷ் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement