மிளகாய் பொடி துாவி ரூ.70 வழிப்பறி மூன்று மாநிலங்களில் ஆறு பேர் கைது
புதுடில்லி: குலாபி பாக் மேம்பாலம் அருகே ஸ்கூட்டரில் சென்றவரை வழி மறித்து, அவரது கண்களில் மிளகாய் பொடியை துாவி, பணப்பையை பறித்து சென்ற ஆறு பேர் இன்று (நவ.,4) கைது செய்யப்பட்டனர்.
மாயாபுரியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், கடந்த அக்., 24ம் தேதி, வேலை நிமித்தமாக சாந்தினி சவுக்கில் உள்ள குச்சா மஹாஜானிக்கு சென்றார். அங்கு 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, நிறுவனத்திற்கு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். வட டில்லி, குலாபி பாக் மேம்பாலம் அருகே, அவரது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், ரோஷனாரா பூங்காவிற்கு அருகே வழி மறித்தனர். திடீரென, அவர் மீது மிளகாய் பொடியை துாவினர். இந்த தாக்குதலில் நிலை குலைந்த போது, பணப்பையை பறித்து, அங்கிருந்து தப்பினர்.
இது தொடர்பாக, அக்., 26ல் ரூப் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குச்சா மஹாஜானி பகுதியில் இருந்த, ‘சிசிடிவி’ காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பாதிக்கப்பட்டவரை, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பின் தொடர்ந்தது தெரியவந்தது. அவற்றின் பதிவு எண்களை அடிப்படையாக வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டில்லி, ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநில போலீசார் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சோதனைகள் மற்றும் விசாரணையை தொடர்ந்து, பணப்பையை பறித்து சென்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில், அக்., 29ல், யோகேஷ் குமார், 30, என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 1.53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதே நாளில், டில்லி, புராரி பகுதியில், சீது, 31 என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 11.80 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அக்., 30 ல் பீகாரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சாந்தன் குமார், 20 , சோனு, 28 மற்றும் மனிஷ் குமார்,, 21 ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து முறையே, 2.50 லட்சம், ஒரு லட்சம், 5.20 லட்சம் ரூபாய் மீடக்கப்பட்டது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
யோகேஷ் மற்றும் சீது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சாந்தின சவுக்கின், பாலிமாரன் பகுதியில், மந்து யாதவ், 25 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 8.10 லட்சம் ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக மந்து யாதவ் செயல்பட்டது தெரியவந்தது. இவர், குச்சா மஹாஜனியில் ஒரு கடையில் துப்புரவு பணியாளராக இருந்தார். அதிகளவில் பணத்துடன் நடமாடுவோர் விபரங்களை திரட்டியுள்ளார். அதன் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது