லிங்க மலையில் கிறிஸ்துவ ஜெப கூட்டம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: 'புதுக்கோட்டை அருகே, சிவன் கோவில் அமைந்துள்ள லிங்கமலையில், சிலுவை நட்டு, ஜெபக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது, கடும் கண்டனத்திற்கு உரியது' என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், மலம்பட்டி அருகே, 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ள லிங்கமலை உள்ளது. அங்கு, சட்டவிரோதமாக வைக்கப்பட்டதாக கூறப்படும் சிலுவை அருகே, ஆர்.டி.ஓ., தடை உத்தரவையும் மீறி, வரும் நவ., 24ல், 'மகா கார்த்திகை' தீபத்தன்று, ஜெபக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட, ஹிந்து பக்தர் மாரிமுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இது, கடும் கண்டனத்திற்கு உரியது.

அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உட்பட சோழர் கால வரலாற்று சான்றுகள் நிறைந்துள்ள லிங்கமலையில், கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த, இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றுவதை திட்டமிட்டு தடுக்கும் த.வெ.க., ஆட்சியில், ஹிந்துக்களின் உரிமையில் கை வைத்தால், யார் கேட்பர் என்ற துணிச்சலா, அல்லது, முதல்வர் தொடங்கி சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள் வரை, கிறிஸ்துவர்களாக இருப்பதாலா?

'அனைவருக்குமான ஆட்சி' என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், தன் செயலிலும், முதல்வர் விஜய் பின்பற்ற வேண்டும். ஹிந்துக்களின் உரிமைகளையும், த.வெ.க., அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement