கோவில் நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேளச்சேரியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, கோவில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் வேளச்சேரியில் மழைநீர் தேங்குவதால், வெங்கடேஸ்வரா நகர், லட்சுமிபுரம் 2வது பிரதான சாலையில் இருந்து, ஐந்தாவது பிரதான சாலையை இணைக்க தார் சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, தண்டீஸ்வரர் கோவில், யோக நரசிம்ம கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 5.41 கிரவுண்ட் நிலத்தைப் பயன்படுத்த தடையில்லா சான்று கோரி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, மாநகராட்சி கமிஷனர் அக்., 23ம் தேதி கடிதம் அனுப்பினார்.

கோரிக்கை நிலுவையில் இருந்தபோது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், அக்., 27ம் தேதி நிலத்தைப் பயன்படுத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவில் வேலியைச் சேதப்படுத்தி, 'ஜே.சி.பி.,' உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் நிரந்தர தார் சாலை அமைக்கும் பணி நடப்பதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், 'சாலைகளை இணைக்க அரசு புறம்போக்கு நிலம் இருந்தும், கோவில் நிலத்தைப் பயன்படுத்துவது சட்டவிரோதம். எனவே, மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து, சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு புயல்களும் சென்னையைத் தாக்காத நிலையில், அமைச்சரிடம் மக்கள் விடுத்த கோரிக்கையால் கோவில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, அவசரநிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அறநிலையத்துறை, மாநகராட்சி உள்ளிட்டோர் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement