அரசு பஸ் மோதி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு

சென்னை: திருப்போரூர் அருகே அரசு பஸ் மோதி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு, 40.08 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, போக்குவரத்துக் கழகத்துக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரா, 36; தினக்கூலி தொழிலாளி. இவர், 2024 பிப்., 23ம் தேதி, திருப்போரூரில் இருந்து நெல்லிக்குப்பத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அம்மாப்பேட்டை அருகே அதிவேகமாக வந்த மாநகர பஸ், வீரா வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், மறுநாள் உயிரிழந்தார்.

இதையடுத்து, பஸ் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் எனக் கூறி, வீரா குடும்பத்தினர் 49 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

பஸ் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது, சாட்சியங்கள் வாயிலாக உறுதியாகிறது. எனவே, போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளியான வீராவுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மறைவால் குடும்பத்தின் எதிர்கால வருவாய் இழப்பு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 40.08 லட்சம் ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் 60 நாட்களுக்குள் மனுதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

இதில், மனைவிக்கு 29.08 லட்சம் ரூபாயும், இரு குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தாயாருக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement