மின்னணு வாழ்வு சான்றிதழை வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்

கள்ளக்குறிச்சி: ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய மின்னணு வாழ்வு சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் தங்களது வீட்டிலிருந்தே அஞ்சல் ஊழியர்கள் மூலமாக பதிவு செய்யலாம் என விருத்தாச்சலம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இணைந்து ஜீவன் பிரமாண் இணைய தளம் மூலமாக இந்த வசதியை வழங்குகிறது. மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம்.

கைரேகை அல்லது முக அடையாள அங்கீகாரம் மூலம் அஞ்சல் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து சான்றிதழை பதிவு செய்து தருவர். ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய வழங்கல் ஆணை எண், வங்கி கணக்கு விவரங்களை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவையை பெற விரும்புபவர்கள் 155299 மற்றும் 033–22029000 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement