பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை கண்டித்து ஊர்வலம்

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை (பொறுப்பு) கண்டித்து, நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியாங்குப்பத்தில், பாரதியார் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2003ம் ஆண்டு, நாதஸ்வர, தவில் இசை வகுப்புகள் மூன்றாண்டு பட்டயப் படிப்பு துவங்கப்பட்டது. நாதஸ்வர தவில் மாணவர்களை கொண்டு, கல்லுாரி சார்பில், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்லுாரி முதல்வராக உள்ள போஸ் (பொறுப்பு) இசை கலையை முற்றிலும் முடக்கும் நோக்கில் ஈடுபட்டு வருகிறார். இந்த துறைக்கு 2026 –27ம் ஆண்டில், சென்டாக்கில் பரிந்துரை செய்யாமல் இருக்கிறார். பாரம்பரியமிக்க ஒரு கலையை அழிக்க நினைக்கும் முதல்வரை கண்டித்து, புதுச்சேரி நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், இசை கலைஞர்கள் நேற்று மாலை 5:00 மணியளவில் சுதேசி மில் இருந்து மேள தாளம் வாசித்து, ஊர்வலமாக சென்றனர்.

பின், அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement