வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது

மீஞ்சூர்: மீஞ்சூரில், வீட்டின் கதவு தாழ்ப்பாளை உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபரை போலீசார் இன்று (நவ.,4) கைது செய்தனர்.

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ஜெயபராஜ், 45. திரைப்படத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று (நவ.,3) இரவு, இவர் பணி தொடர்பாக வெளியில் சென்றிருந்தார். இவரது குடும்பத்தினர், கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு துாங்க சென்றனர்.

நள்ளிரவில் மர்மநபர் ஒருவர், வீட்டின் கதவு தாழ்ப்பாளை நீக்கி உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்குள், சுரேஷ் ஜெபராஜின் அறையில் இருந்து மர்ம நபர் தப்பியோடினார்.

குடும்பத்தினர், அந்த அறையில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடி வந்தனர்.

விசாரணையில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கார்த்தி, 21, என்பவர், மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அதையடுத்து, இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement