நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் நிலத்தை மீட்க குழு அமைப்பு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க, சென்னை கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீராம் என்பவர் தாக்கல் செய்த மனு:

நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக, 377 கிரவுண்ட் நிலத்தில், 123 கிரவுண்ட் நிலம், 126 பேருக்கு, நகர வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 34 கிரவுண்ட் நிலம் அறநிலையத்துறை நேரடியாக பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை, சட்ட விரோதம் என்பதால், நிலத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி.பாலசுப்பிரமணியன், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதிகள், கோவிலுக்கு சொந்தமாக நிலத்தை மீட்க, சென்னை கலெக்டர் தலைமையில், தாசில்தார், நிலஅளவைத் துறை உதவி இயக்குநர், சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்கிறோம்.

இந்த கமிட்டி நிலத்தை கண்டறிந்து, ஆறு வாரத்துக்குள்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement