லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி; நண்பர் ‘சீரியஸ்’ விபத்திற்கு காரணமான இரு மாடுகளும் உயிரிழப்பு
பள்ளிக்கரணை: சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது மோதி, பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர்களில் ஒருவர், டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில், இருமாடுகளும் உயிரிழந்தன.
கோயம்புத்துார் மாவட்டம், அன்னுார் பகுதியைச் சேர்ந்தவர் நதீஷ், 22. இவர், மேடவாக்கத்தில் உள்ள ஆர்.ஜே.பாய்ஸ் எனும் ஆண்கள் விடுதியில் தங்கி தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே விடுதியில் தங்கியுள்ளவர் சேத்தன், 24. இவர் பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளளவில், இருவரும் டீ குடிப்பதற்காக, நண்பரின் ‘ராயல் என்பீல்டு புல்லட்’ பைக்கை எடுத்து கொண்டு, வேளச்சேரி பிரதான சாலை வழியாக, தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மேடவாக்கம் உழவர் சந்தை அருகே சென்றபோது, சாலையில் படுத்திருந்த இரண்டு மாடுகள் மீது எதிர்பாராத விதமாக புல்லட் மோதியதில், நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது, பின்னால் வந்த கச்சா எண்ணெய் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கிய நதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேத்தன் பலத்த காயமடைந்தார்.
மேலும், மாடுகள் மீது மோதி லாரி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன.
அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சேத்தனை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நதிஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி, சித்தாலபாக்கத்தில் உள்ள சமையல் எண்ணெய் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் டேங்கர் லாரி என தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரான கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கோபிநாதன், 42, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
-
வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
-
ஆசிரியை படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆசிரியர்கள் மீது வழக்கு
-
உலக செய்திகள் சில வரிகளில்
-
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் நிலத்தை மீட்க குழு அமைப்பு
-
கோவை தி.மு.க., அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்