தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தியது அம்பலம்!

1

சென்னை: தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க, திமுக நிர்வாகி அரசகுமார் உள்ளிட்டோர், தனி அலுவலகம் நடத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத்தருதல் உள்ளிட்ட செயல்களுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி, மோசடி செய்ததாக, திமுகவைச் சேர்ந்த, பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

அதற்கு முன், திமுக செய்தி தொடர்புக் குழு துணை செயலராக இருந்த, அரசகுமார், 58, கைதாகி, ஜாமினில் வெளியே உள்ளார். இவர்களின் முக்கிய கூட்டாளியான, முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

அரசகுமார், மகேஷ், முத்துகுமார் உள்ளிட்டோர், கூட்டு சதி செய்து, பண மோசடியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு அவர்கள் கையாண்ட யுக்தி அதிர்ச்சி அளிக்கிறது.

2023ம் ஆண்டுக்கு முன், தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு, 3 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. மூன்று முறை முறையாக அங்கீகாரம் பெற்று, விதிகளை முறையாக பின்பற்றும் பள்ளிகள் விரும்பினால், 20 ஆண்டுகளுக்கான அங்கீகார சான்றிதழ் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று, குடிநீர், கழிப்பிட வசதி, ஆசிரியர்களின் தகுதி நிலை குறித்து, சரி பார்த்த பின்னரே, அரசு அங்கீகாரமும், அதை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை,அரசகுமார் உள்ளிட்டோர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளனர்.

இவர்கள், பிரச்னை உள்ள, 177 பள்ளிகளின் நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மகேஷ், நாங்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்திடுவார். எங்களுக்கு பணம் கொடுக்காமல், பள்ளியை நடத்த முடியாது' என, மிரட்டி உள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க, தனி அலுவலகம் நடத்தி உள்ளனர். இது மகேசுக்கும் தெரியும். அரசகுமாருடன் சேர்ந்து, பணம் வசூல் செய்யும் பணியில், தனியார் பள்ளி நிர்வாகிகளான, சந்திரசேகரன், தினேஷ், சுசீந்திரன், தெய்வசிகாமணி என 10க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement