விளம்பர பேனர்களால் விபாபாரம் பாதிப்பு: மீஞ்சூர் வியாபாரிகள் புகார்

மீஞ்சூர்: மீஞ்சூர் பஜார் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி வியாபாரிகள் போலீஸ், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளர்.

பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு, சாலையின் இருபுறமும் மளிகை, ஜவுளி, ஆபரணம் என, 1,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் அதிகமான கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக, இது உள்ளது.

இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையின் ஓரங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர். போக்குவரத்திற்கும் இடையூறாக அமைகின்றன.

இவற்றை அகற்ற வேண்டும் என, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில், காவல் நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் நேற்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் செயலர் ஷேக் அகமது கூறியதாவது:

மீஞ்சூர் பஜார் வீதியின் பல்வேறு பகுதிகளில், அரசின் அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.

கடைகளுக்கு முன் பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பதால், வியாபாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. கடைகள் தெரியாமல் விற்பனை பாதிக்கிறது.

பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோரங்களில், பேனர்களுக்கான சாரங்கள் அமைக்கப்படுகின்றன.

இவற்றால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சிரமம் கருதி, விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்.

மேலும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக, பேனர்கள் பொருத்துவதற்காக மரக்கட்டடைகளால் ஆன சாரங்கள் வைப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement