நாமக்கல்லில் செஞ்சி சிறுமி? அங்கன்வாடி ஊழியர் கதறல்

நாமக்கல்: நாமக்கல்லில், செஞ்சி சிறுமியை பார்த்ததாக வந்த தகவலை அடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த, ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த, 7 வயது சிறுமி ஹேமலதா, அக்., 12 அதிகாலை முதல் மாயமானார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, அங்கன்வாடி சமையலர் பவானி, 35, என்பவர், அக்., 29ல், சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில், ஒரு தம்பதியுடன் சிறுமி ஹேமலதாவை பார்த்ததாக, '100'க்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், பவானியிடம் விசாரணை நடத்தினர்.

பவானி கூறுகையில், ''நான் கடந்த, 23ல், செஞ்சியில் காணாமல் போன சிறுமி போன்ற ஒருவரை முருகன் கோவிலில் பார்த்தேன். 90 சதவீதம் அந்த சிறுமி போலவே இருந்ததால், போலீசில் தகவல் தெரிவித்தேன். என்னிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

தற்போது, நான் பணிபுரியும் இடத்தில் விசாரிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் தான் கூறினேன். என்னிடம் விபரங்களை வாங்கிக்கொண்டு, தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றனர். எதற்காக சிறுமி குறித்த தகவலை கூறினோம் என கஷ்டமாக உள்ளது,'' என்றார்.

Advertisement