சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சுப்ரீம் கோர் அதிருப்தி! மாயமான கோப்புகளை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
-சிறப்பு நிருபர்-
'சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை' என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அபூர்வ ஐம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் கடத்தப்பட்டன. தமிழக போலீஸ் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
புகார்
பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வுக்கு பின், பொறுப்புகள் மாறியபோது, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், சாட்சியங்களின் விபரங்கள் மற்றும் மிக முக்கியமான 'கேஸ் டைரி' எனப்படும் வழக்கின் கோப்புகள் உட்பட, 41 ஆவணங்கள், டிஜிட்டல் குறுந்தகடுகள், போலீஸ் அலுவலகத்தில் இருந்து மாயமானது.
சிலை கடத்தல் கும்பலுக்கும், போலீஸ் உயரதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பை மறைக்கவே, இந்த ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால், பொன். மாணிக்கவேல் பணி ஓய்வுக்கு பின், பொறுப்புகள் மாறியபோது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகளே ஆவணங்கள் மாயமானதற்கு பிரதான காரணம் என போலீசார் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தச் சூழலில் வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் என்பவர், ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான, 41 ஆவணங்கள் மாயமானது குறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சில குறுந்தகடுகள் எதிர்பாராத தீ விபத்தில் அழிந்துவிட்டன. இதுவரை, 21 பழமையான சிலைகள் மீட்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
சந்தேகம்
தமிழக அரசின் வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் முன்வைத்த வாதம்: சிலை கடத்தல் வழக்கின் முழு விபரங்களும் அடங்கிய 'கேஸ் டைரி' என்ற முக்கிய கோப்பு மாயமானது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இதில், தொடர்புடைய உயரதிகாரிகள் இன்றும் உயர் பதவிகள் வகிப்பதால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. வெறும் கண் துடைப்புக்காகவே விசாரணை நடந்து வருகிறது. எனவே, மாயமான ஆவணங்களை கண்டறிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் விசாரணை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக விமர்சித்தனர். இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசின் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. கடத்தப்பட்ட, 21 சிலைகள் மீட்கப்பட்டதாக கூறுகிறீர்கள். ஆனால், அந்த சிலைகள் யாரிடம் இருந்து மீட்கப்பட்டன? மீட்கப்பட்ட சிலைகள் தற்போது எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை சொல்லவில்லை.
ஒத்திவைப்பு
எனவே, சிலை கடத்தல் வழக்கில் மாயமான ஆவணங்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மீட்கப்பட்ட சிலைகள் தொடர்பான முழு விபரங்கள்; கைதானவர்களின் பட்டியல் மற்றும் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்கள் அதில் இடம் பெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வரும் டிச., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆவணங்களை பொறுப்பான அதிகாரியை பணிநீக்கம் செய்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் கோவில் கொள்ளைக்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு