விளாச்சேரியில் அகல் விளக்கு தயாரிப்பு: யானைச்சாணம் இல்லாமல் பாதிப்பு

திருப்பரங்குன்றம்: களிமண்ணுடன் கலவை சேர்க்க யானைச் சாணம் கிடைக்காததால் திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் மெகா களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.

விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், காகித கூழ், சிமென்ட் மூலம் பொம்மைகள் தயாரிக்கின்றனர். கார்த்திகை மாதம் நெருங்குவதால், களிமண்ணால் இங்கு அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணால் தயாரிக்கப்படும்.

30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும் இவ்விளக்குகள், 3 நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் 2 லிட்டர் கொள்ளளவுடன், ஓரடி உயரத்தில் 25 விளக்குகள், 100 மில்லி கொள்ளளவுடன், மூவாயிரம் விளக்குகள் திருவண்ணாமலை தீபத்திற்கு தயாரித்து அனுப்பப்படுகிறது.

இப்பணியில் உள்ள கவுரிசங்கர் கூறியதாவது: 32 ஆண்டுகளாக அகல் விளக்குகள் தயாரிக்கிறோம். ஒரு அடிக்கு மேல் விளக்குகள், சுவாமி சிலைகள் செய்ய, களிமண்ணுடன் குறுமணல், யானைச்சாணம் சேர்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் யானை முகாமுக்கு சென்றுள்ளதால் சாணம் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் கோயில், யானை வளர்ப்போரிடம் பெற்றோம்.

இந்தாண்டு பல இடங்களில் முயற்சிக்கிறோம். கிடைத்த உடன் பெரிய அகல் விளக்குகள் தயாரிக்க உள்ளோம்.

அதுவரை 100 மி.லி., கொள்ளளவில் 3 ஆயிரம் விளக்குகள் தயாரிக்கிறோம் என்றார்.

Advertisement